Sunday, September 11, 2016

தான்சானியா நாட்டில் பயங்கர நிலநடுக்கம்; 13 பேர் பலி

டோடோமா


கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவில் உகாண்டா மற்றும் ருவாண்டா நாடுகளின் எல்லைக்கு அருகே நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடக்கு பகுதியை கடுமையாக உலுக்கியது. உள்ளூர் நேரப்படி பகல் 3.27 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் புகோபா என்ற நகரில் பெரும் அளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது. அந்த நகரில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

இதுகுறித்து அந்த நகரின் மாவட்ட கமிஷனர் கூறுகையில், “இந்த நிலநடுக்கம் அதிகப்படியான சேதங்களை ஏற்படுத்தி விட்டது. இருந்த போதிலும் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது” என கூறினார்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 13 பேர் உயிர் இழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு உள்ளனர். 
You may also like:

No comments :

Post a Comment